×

ரயில் நிலையத்தில் புகுந்த காட்டுயானை: பயணிகள் அலறி ஓட்டம்

திருமலை: ஆந்திர மாநிலம் பார்வதிமனியம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரத்தில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது. குறிப்பாக கொத்தவலசை கிராமத்தில் ஒற்றை யானை சுற்றித்திரிந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். மேலும் சில நாட்கள் முன்பு கொமரடா மண்டலத்தில் பயணிகள் சென்ற பஸ்சை வழிமடக்கிய ஒற்றை யானை கண்ணாடியை உடைத்து தாக்குதல் நடத்தியது. இதையடுத்து வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இந்நிலையில் பார்வதிமனியம் ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஒற்றை காட்டு யானை புகுந்தது. இதை பார்த்த பயணிகள் சிலர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த யானை ரயில் நிலையத்தில் சிறிது நேரம் சுற்றித்திரிந்துவிட்டு சென்றது. அதிகாலை நேரம் என்பதால், ரயில் நிலையத்தில் பயணிகள் குறைவாக இருந்ததாலும், ரயில் நிலையம் அருகே பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததாலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ரயில் நிலையத்தில் யானை புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களை மேலும் பீதியடைய செய்துள்ளது.

The post ரயில் நிலையத்தில் புகுந்த காட்டுயானை: பயணிகள் அலறி ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Parvathipuram ,Parvatimaniam ,Andhra Pradesh ,
× RELATED வெடிகுண்டுகள், கத்தி உள்பட பயங்கர...